தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து
முத்தமிழ் விழா 2019
தமிழ்க் கல்விச்சேவையின் கீழ் இயங்கிவரும் 106 தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்மக்களும் இணைந்து முத்தமிழ் விழாவை 14.09.2019 சனிக்கிழமை சூரிச் நகரில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடினர். மங்கல விளக்கேற்றலுடன் தொடங்கிய இந்நிகழ்வில் தாய்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர்கள், மதகுருமார்கள், தமிழ்ப்பள்ளிகளின் இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வின் சிறப்பாக முத்தமிழ் விழா மலரும், பேராசிரியர் சண்முகதாஸ், பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோரினால் தொகுக்கப்பெற்று கல்விச்சேவையால் ஆக்கப்பெற்ற ஷதமிழ்ப்பெயர்த் தொகுப்பு| என்ற நூலும் வெளியிட்டு வைக்கப்பெற்றன.
2019 ஆம் ஆண்டிலே தமிழ்மொழியில் ஆண்டு 10, ஆண்டு 12 சித்திபெற்ற மாணவர்களும், 25 ஆண்டுகள், 20 ஆண்டுகள், 10 ஆண்டுகள் சேவை நிறைவு செய்த மாநில இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்கள், ஆசிரியர்களும் மதிப்பளிக்கப்பெற்றனர்.
ஓவியப்போட்டி 2019 இல் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பில் அவர்கள் போட்டியிலே வரைந்த ஓவியமும் சான்றிதழும் வழங்கப்பெற்றதோடு அவர்களின் ஓவியங்களும் விழா மண்டபத்திலே காட்சிப்படுத்தப்பெற்றிருந்தன.
பன்னாட்டு சிறுவர் நாளை முன்னிட்டு கல்விச்சேவையால் மேற்கொள்ளப்பெற்றிருந்த தாயக சிறுவர்களுக்கான மேம்பாட்டுத் திட்டத்திலே இணைந்து 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் கூடுதலாகப் பணத்தினைச் சேகரித்த மாணவர்கள் இம் முத்தமிழ் விழாவிலே சிறப்பிக்கப்பெற்றனர்.
பெரியவர்கள், இளையவர்கள் என அனைவரதும் ஒருமித்த உழைப்பின் அறுவடையாக சிறப்பாக நடைபெற்ற முத்தமிழ் விழா 2019 எமது மொழி, கலை, பண்பாடு என்பவை அடுத்த தலைமுறையினரிடம் பக்குவமாகக் கடத்தப்படுகின்ற செய்தியையும், தொடர்ந்தும் ஆண்டு தோறும் இளையவர்கள் இவ்விழாவைச் சிறப்பாகச் செய்வார்கள் என்ற நம்பிக்கையையும் சுட்டி நின்றது.